இந்தியா
தெரு கடை வியாபாரிகளுக்கு சிறு கடன் பெற புதிய செயலி; மத்திய அரசு அதிரடி!

தெரு கடை வைத்திருப்பவர்கள் கடன் பெற PM சிவநிதி (http://pmsvanidhi.mohua.gov.in/) என்ற புதிய செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
கொரோனாவால் தெரு கடைகளின் வியாபாரம் செய்தவர்களின் பொருளாதாரம் சரிந்தது. எனவே தெரு கடைகளின் வியாபாரத்தைச் சீர் செய்து, மீண்டும் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் 10 ஆயிரம் ரூபாய் வரை சிறு கடன் அளிப்பதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது.
அதன் பெயரில் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள PM SVANidhi செயலியைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்து ஒரு வருட தவணையில் 10 ஆயிரம் ரூபாய் வரை கடன் பெற முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற்று, அதன் தவணையைச் சரியான நேரத்தில் திருப்பி செலுத்தி வந்தால் 7 சதவீதம் வரை வட்டி மானியமாக வங்கி கணக்கில் திரும்ப அளிக்கப்படும்.
அதுமட்டுமல்லாமல், இந்த தெரு கடை வியாபாரிகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலம் வியாபாரம் செய்யும் போது மாதம் 100 ரூபாய் ஊக்கத்தொகையும் மத்திய அரசு வழங்குகிறது.
ஜூன் 1-ம் தேதி முதல் PM SVANidhi செயலி பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி பல தெரு கடை வியாபாரிகளுக்குத் தெரியாது என்பதால், இந்த செய்தியை அவர்களுடன் பகிர்வதன் மூலம், அதிக வட்டிக்கு கடன் வாங்காமல் அவர்கள் பயன்பெறுவார்கள்.












