இந்தியா
இந்தியாவில் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவிப்பு

21 நாள் ஊரடங்கு முடிவடையும் நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்தினார். கொரோனா பரவி வரும் சூழலில் ஊரடங்கை மே 3 வரை நீட்டித்து அறிவித்துள்ளார். அவரது பேச்சின் விவரம்…
“கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றி பெற்று வருகிறோம். குடும்பத்தை பார்க்காமல், உணவு கிடைக்காமல் மக்கள் சிரமப்பட்டு வருகிறார்கள் என்பது எனக்கு தெரிகிறது. வாழ்க்கை சவால் நிறைந்தது என்பதற்கு அம்பேத்கர் வாழ்க்கையே உதாரணம். கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதற்கு இடையில் நாம் நாட்டை பாதுகாத்து வருகிறோம். பண்டிகைகளை வீட்டில் இருந்தே கொண்டாடுங்கள். கொரோனாவால் ஏற்பட இருந்த பாதிப்பை இந்தியா தவிர்த்துள்ளது. கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றுவது நம்பிக்கை தருகிறது.
பிற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு அதிகரித்து இருக்கும். 21 நாளுக்கு முன் 500 பேருக்கு கொரோனா இருந்தது. தற்போது 10 ஆயிரமாக உள்ளது. கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை பிற நாடுகள் பாராட்டுகின்றன. இப்படி கடினமான நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். பொருளாதாரத்தை விட மக்கள் உயிர்தான் முக்கியம் என்பதால் மே 3வரை ஊரடங்கு நீட்டிக்கப்டுகிறது. அதாவது மேலும் 19 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு. பரவலை தடுக்கவே நீட்டிப்பு அவசியமாக உள்ளது. கொரோனா அதிகம் உள்ள பகுதிகளை நாம் கவனமுடன் கையாள வேண்டும். ஏப்ரல் 20க்குப் பின் சில அத்தியாவசிய பணிகளுக்கு அனுமதி வழங்கப்படும். இதுவரை தந்ததை போல மக்கள் இனியும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என பிரதமர் மோடி பேசினார்.


















