தமிழ்நாடு
நான் அமமுகவில் தான் இருக்கிறேன்: ரஞ்சித்தை சமாதானம் செய்த தினகரன்!

கடந்த சில தினங்களாக நடிகர் ரஞ்சித் அமமுகவில் ஏற்பட்ட சில கசப்பான அனுபவங்களால் அந்த கட்சியில் இருந்து விலகி திமுக அல்லது பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் பரவின. இந்நிலையில் இது குறித்து நடிகர் ரஞ்சித் விளக்கம் அளித்துள்ளார். அதில் தான் அமமுகவில் தான் தொடர்வதாக தெரிவித்துள்ளார்.
கடந்த மக்களவை தேர்தலின் போது பாமக, அதிமுக உடன் கூட்டணி வைத்தது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்த கூட்டணி பிடிக்காத அக்கட்சியின் துணைத்தலைவர் நடிகர் ரஞ்சித் டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். ஆனால் அமமுகவில் தனக்கு உரிய முக்கியத்துவமோ, மரியோதையோ அளிக்கப்படவில்லை என ரஞ்சித் வருத்தத்தில் உள்ளதாக கூறப்பட்டது.
கடந்த தேர்தலின் போது அமமுகவில் இருந்து யாரும் ரஞ்சித்தை பிரச்சாரத்துக்கு அழைக்கவில்லையாம். இருந்தாலும் தானாகவே பல மாவட்டங்களுக்கு பிரச்சாரத்துக்கு சென்றுள்ளார். ஆனால் எந்த மாவட்டத்திலும் அமமுகவின் மாவட்டச் செயலாளர்கள் ரஞ்சித்தை வரவேற்கவோ, இந்த இடத்தில் பேசுங்கள் என்று திட்டமிட்டுக் கொடுக்கவோ இல்லையாம்.
இவையெல்லாவற்றையும் தாண்டி தனது சொந்த செலவில் ரஞ்சித் தினகரனுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதையெல்லாம் தினகரனிடம் சொல்லியும் அவர் கண்டுகொள்ளவில்லையாம். இது போன்ற காரணங்களுக்காக ரஞ்சித் அமமுகவில் இருந்து விரைவில் விலகி விரைவில் திமுக அல்லது பாஜகவில் இணையலாம் என செய்திகள் பரவின.
இந்நிலையில் நடிகர் ரஞ்சித் இது தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், நான்அமமுகவிலிருந்து விலகுவதாக கடந்த ஒருவாரமாக பத்திரிகைகளில் செய்தி வந்துகொண்டிருக்கிறது. இது மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. நான் தற்போதும் அமமுகவில்தான் இருக்கிறேன். என்னுடைய தலைவர் தினகரன்தான். நான் எதையும் எதிர்பார்த்து கட்சிக்கு வரவில்லை. அதனால் எனக்கு எந்த ஏமாற்றமும் இல்லை. என்னுடைய பயணம் அமமுகவில்தான் தொடரும், அமமுகவை விட்டு விலகும் எண்ணமில்லை என்றார்.
டிடிவி தினகரன் தனது உதவியாளர் மூலமாக நடிகர் ரஞ்சித்திடம் சமாதானம் பேசிய பின்னரே அவர் இந்த விளக்கத்தை அளித்ததாகவும் செய்திகள் பரவி வருகிறது.

















