தமிழ்நாடு
பிள்ளை பிடிக்கும் எடப்பாடி பழனிசாமி: சேலத்தில் பிடிபிடியென பிடித்த தினகரன்!

நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் டிடிவி தினகரனின் அமமுக எதிர்பார்த்த வெற்றியை பெறமுடியவில்லை. படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து அமமுக முக்கிய நிர்வாகிகள் பலர் மாற்று கட்சிகளுக்கு செல்கின்றனர்.
அதிமுக மற்றும் திமுகவுக்கு வரிசையாக அமமுக நிர்வாகிகள் சென்றுகொண்டிருக்கிறார்கள். இது தினகரனுக்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கட்சியை வலுப்படுத்த தினகரன் தர்மபுரி, சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
தேர்தல் தோல்விக்கு பின்னர் சேலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தினகரன் எடப்பாடி பழனிசாமியை பிடிபிடியென பிடித்தார். முன்னதாக இதில் பேசிய அமமுக துணைப் பொதுச்செயலாளர் பழனியப்பன், அமமுக நிர்வாகிகள் மீது இருக்கும் பழைய வழக்குகளை தூசுத் தட்டி உளவுத் துறையினர், போலீஸ் மூலம் மிரட்டி உங்கள் பக்கம் இழுத்துக் கொள்கிறீர்கள். இந்த பிள்ளை பிடிக்கும் வேலையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார் காட்டமாக.
கடைசியாக பேசிய தினகரன், தமிழகத்தில் அமமுக அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து நிற்பதற்கு காரணம் ஆணிவேராக இந்த இயக்கத்தைத் தூக்கிப் பிடித்திருக்கும் தொண்டர்கள்தாம். இதனால்தான் அமமுகவினரை வலைவீசி பிள்ளை பிடிப்பவர்களைப் போல ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் பிடித்துக்கொண்டிருக்கிறது. அமமுக ஆளுங்கட்சியாக வளர்ந்துவிடும் என்ற அச்சம்தான் இதற்குக் காரணம் என்றார்.
தலைமைக் கழகம் ஆரம்பித்து கிளைக் கழகம் வரை நமது நிர்வாகிகளை உளவுத் துறை வைத்து மிரட்டி இழுக்கிறார்கள். தொழில் செய்பவர்களைக் குறிப்பாக காண்டிராக்ட் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களை மிரட்டியும், உள்ளாட்சித் தேர்தலில் வாய்ப்பளிப்போம் என ஆசைவார்த்தை கூறியும் தங்கள் பக்கம் இழுக்கிறார்கள். பலவீனமாக இருப்பவர்கள் அவர்கள் பக்கம் சென்றுவிடுகிறார்கள் என சேலத்தில் தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார் தினகரன்.








