இந்தியா
திருமணமாகாதவர் சான்றிதழ் இனி ஆன்லைன் மூலம் சுலபமாக பெறலாம்.

திருமணமாகாதவர் சான்றிதழ் பெற இனி தாலுகா அலுவலகங்களிலோ அல்லது வழக்கறிஞர் அலவலகங்களிலோ காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் ஆன்லைன் மூலமே இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற முடியும்.
திருமணமாகாதவர் சான்றிதழ் விவாகரத்து பெற்றவர், வாழ்க்கைத்துணை இறந்தவர்கள் போன்ற தனிநபர் நிலை சான்றிதழ் பெற வழக்கறிஞர் அபிடவிட் சான்றிதழ், வருவாய்த்துறை சான்றிதழ் என பல சான்றிதழ்களை பலரிடமும் சென்று வாங்க வேண்டியிருக்கும். அதற்கும் பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு பின்னரே மேற்கண்ட சான்றிதழ்களை பெற முடியும்.
தற்போது இத்தகைய அலைச்சல் ஏதுமின்றி இ-சேவை மூலம் விண்ணப்பித்தால் தானாகவே வட்டாட்சியரின் மின்கையொப்பத்துடன் கூடிய சான்றிதழ் வழங்கப்படும். இதற்காக சுய உறுதிமொழி படிவம் மற்றும் ஆதார் எண் அடிப்படையிலேயே சான்றிதழ் வழங்கப்படும்.
அதன்படி மேற்குறிப்பிட்ட அணைத்து நிலை சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த சான்றிதழ் வேலைவாய்ப்பு மற்றம் உயர் கல்விக்காக வெளிநாடு செல்பவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதற்கு சட்டப்படி பெண்கள் 18 வயதும் ஆண்கள் 21 வயதும் முடிந்தவர்கள் மட்டுமே மேற்கண்ட சான்றிதழ்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
சுய உறுதிமொழியில் தவறான தகவல்களை அளித்து சான்று பெறுவது கண்டறியப்பட்டால் பாரதிய நியாய சம்கிதா 2023 சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருமணமாகாதவர் சான்றிதழை ஒருமுறை பெற்றால் விண்ணப்பதாரருக்கு திருமணம் நடக்கும் வரை அது செல்லுபடியாகும். திருமணம் நடந்தவுடன் அது தானாகவே ரத்தாகிவிடும். அதேபோல் விவாகரத்தானவர்கள் வாழ்க்கைத்துணை இழந்தவர்கள் மறுமணம் செய்து கொண்டாலும் ஏற்கனவே பெற்ற தனிநபர் நிலை சான்றிதழ் ரத்தாகிவிடும்.









