தமிழ்நாடு
தலை வணக்கம் தமிழகமே: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி!

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று நடைபெற்று வருகிறது. இதில் மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் தமிழக மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால் தமிழகம் மற்றும் புதுவையில் 39 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது இதில் திமுக கூட்டணி 38 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஒரே ஒரு இடத்தில் மட்டும் அதிமுக சிறிய அளவில் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. அதே போல சட்டசபை இடைத்தேர்தலிலும் திமுகவே அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதில், தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்துள்ள மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் எங்கள்மேல் வைத்துள்ள நம்பிக்கையை எந்நாளும் காப்போம்! தமிழகத்தின் உரிமைகளை காக்க என்றும் குரல் கொடுப்போம்! என தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி பிரதமராக பதவியேற்க உள்ள பிரதமர் மோடிக்கும் ஸ்டாலின் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.





















