இந்தியா
அமலுக்கு வந்தது புதிய தொழிலாளர் சட்டங்கள்

இந்திய ஒன்றிய அரசு ஏற்கனவே இந்திய சிவில் சட்டம் மற்றும் இந்திய கிரிமினல் சட்டம் ஆகியவற்றை மாற்றி சில மாதங்களுக்கு முன் புதிய சட்டங்களை அமலுக்குக் கொண்டு வந்தது. அந்த வரிசையில் தற்போது இந்திய நாட்டில் அமலில் இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து தற்போது 4 புதிய சட்டங்களை 21ம் தேதி அமலுக்குக் கொண்டு வந்தது.
இந்த புதிய சட்டங்கள் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி ” சுதந்திரத்திற்கு பிறகு தொழிலாளர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சீர்திருத்தம் இது. நாட்டின் தொழிலாளர்களுக்கு பெரிதும் அதிகாரம் அளிக்கும். தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாக்கும். புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் உற்பத்தித் திறனையும் அதிகரிக்கும். சமூகப் பாதுகாப்பு சரியான நேரத்தில் ஊதியம் மற்றும் பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்யும்” என்று கூறியுள்ளார்.
சாதகங்கள்
- இந்த சட்டத்தினால் தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை 9 முதல் 12 மணி நேரமாகவும் கடைகள் மற்றும் நிறுவனங்களில் வேலை நேரத்தை 9 முதல் 10 மணி நேரமாகவும் அதிகரிக்கிறது.
- 100 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு தற்போதுள்ள விதிமுறை குறைந்தபட்சம் 300 தொழிலாளர்களாக உயர்த்தியுள்ளது.
- போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றம் சம்மதத்துடன் சுரங்கத் தொழில்கள் உட்பட அணைத்துத் துறைகளிலும் பெண்கள் இரவுப் பணி செய்ய இந்தச் சீர்திருத்தங்கள் அனுமதிக்கின்றன.
- அணைத்து ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ஒரு சட்டபுர்வ உரிமையாக மாற்றப்பட்டுள்ளது.
- ஒன்றிய அரசே அடிப்படை ஊதியத்தை நிர்ணயிக்கும்.
- எந்தவொரு கூடுதல் நேர வேலைக்கும் 2 மடங்கு ஊதியம் வழங்க வேண்டும்.
- ஒப்பந்த ஊழியர் மற்றம் நிரந்தர ஊழியர் ஆகியோருக்கு சமமான ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்பட வேண்டும்.
- பணிக்கொடை பெறுவதற்கான காலவரம்பு 5 வருடமாக இருந்தது இப்பொழுது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் குறிப்பிட்ட கால பணிக்கான ஊழியர்களும் ஓராண்டு பணியாற்றிய பிறகு பணிக்கொடை பெறத் தகுதியுடையவர்கள் ஆவர்.
- வெளிப்படைத்தன்மையை மேம்படுத்த அணைத்து தொழிலார்களுக்கும் நியமன கடிதங்கள் வழங்கப்பட வேண்டும்.
- தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் குறைந்தபட்ச இருப்புத்தொகை 40 முதல் 70 சதவீதத்திலிருந்து தற்போது 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
- வேலைநிறுத்தத்திற்கான அறிவிப்பு 14 நாட்கள் முன்கூட்டியே வழங்க வேண்டும்.
- 75 சதவீத தொழிலாளர்கள் ஒப்புதல் இருந்தால் மட்டுமே சட்டபுர்வமாக வேலைநிறுத்தம் அங்கீகரிக்கப்படும்.
- ஒரே நேரத்தில் அதிகமான தொழிலாளர்கள் சாதாரண விடுப்பு எடுப்பது அறிவிக்கப்படாத வேலை நிறத்தமாக கருதப்படும்.
150 ஆண்டுகால தொழிலாளர் போராட்டங்கள் விளைவாக உருவாக்கப்பட்ட 44 சட்டங்களில் 15 சட்டங்களை ரத்து செய்துவிட்டு மீதி 29 சட்டங்களைச் சுருக்கி 4 சட்ட தொகுப்புகளாக ஒன்றிய அரசு 5 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றியது. தொழிலாளர்களின் எதிர்ப்பு காரணமாக நிலுவையில் வைக்கப்படடிருந்த அந்த சட்டங்களை திடீரென நேற்று முதல் அமலுக்கு கொண்டு வந்து அறிவித்துள்ளது.
பாதகங்கள்
இந்த சட்டங்கள் குறித்து தொழிலாளர்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் தங்களது கருத்துக்களை பின்வருமாறு தெரிவித்துள்ளனர்.
முதலில் சட்ட உரிமைகள் பெற்ற நிரந்தர தொழிலாளர்கள் இருக்க மாட்டார்கள் என்பதை இச்சட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன. சில மாதங்கள் அல்லது வாரங்கள் வேலைக்கு வைத்துவிட்டு எந்த நேரத்திலும் எந்தக் காரணமும் இல்லாமலும் அவர்களை வேலையை விட்டு வெளியேற்ற இச்சட்டங்கள் வழி வகுக்கின்றன.
தொழிலாளர்கள் சங்கமாக சேரும் உரிமை மற்றும் கூட்டாக வேலையளிப்பவரிடம் கோரிக்கை வைக்கும் உரிமை ஆகியவை பெருமளவு பறிக்கப்படுகின்றன.
சட்ட விதிகளின்படி தொழில் நடத்தப்படுகிறதா என்பதை அரசு ஆய்வு செய்யும் முறை தளர்த்தப்பட்டு சட்ட விதிகள் அமுலாக்கப்படுகின்றன என்று முதலாளிகளே தமக்கு தாமே சான்றிதழ் வழங்கிக் கொள்ள இச்சட்டம் அதிகாரம் வழங்குகிறது.
