வேலைவாய்ப்பு
திருச்சி மாவட்டத்தில் 57 ஊர்க்காவல் படை காலியிடங்கள் – விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

திருச்சி மாவட்ட இளைஞர்களுக்கு ஊர்க்காவல் படையில் பணியாற்றும் ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழக காவல்துறையின் துணை அமைப்பாக செயல்படும் இந்த ஊர்க்காவல் படையில், மொத்தம் 57 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 53 ஆண் ஊர்க்காவல் படையினரும், 4 பெண் ஊர்க்காவல் படையினரும் சேர்க்கப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள், திருச்சி மாவட்ட ஆயுதப்படையில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களுடன் நேரிலோ அல்லது ரூ.5/- தபால் தலை ஒட்டிய சுய முகவரி கொண்ட உறையுடன்,
“காவல் சார்பு ஆய்வாளர், ஊர்க்காவல்படை அலுவலகம், ஆயுதப்படை வளாகம், சுப்ரமணியபுரம், திருச்சி”
என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்கும் கடைசி தேதி 22.09.2025.
தேர்வு தேதி:
03.10.2025 காலை 7 மணிக்கு, திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேர்வு நடைபெறும்.
தகுதி நிபந்தனைகள்:
வயது: 20 முதல் 45 ஆண்டுகள் வரை
கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி (தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம்)
உடல் தகுதி மற்றும் நன்னடத்தை அவசியம்
தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும், திருச்சி மாவட்ட காவல் துறை எல்லைக்குள் குடியிருப்பவராகவும் இருக்க வேண்டும்
எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினராக இரக்கூடாது
சிறப்பு முன்னுரிமை:
விளையாட்டு வீரர்கள் மற்றும் பேண்டு வாத்தியம் இசைக்க தெரிந்தவர்கள் தேர்வில் முன்னுரிமையும் தளர்வும் பெறுவார்கள்.
1962-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஊர்க்காவல் படை, காவல்துறையுடன் இணைந்து ரோந்து, போக்குவரத்து கட்டுப்பாடு, விஐபி பாதுகாப்பு, திருவிழா மற்றும் பொதுக்கூட்டங்களில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு, காவல்துறையில் பணிபுரிய விரும்பும் இளைஞர்களுக்கு மிகச்சிறந்த வாய்ப்பாகும்.




