தமிழ்நாடு
சிங்கத்தின் தலையாக இருப்போமே தவிர, யாருக்கும் வாலாக இருக்க மாட்டோம்: கர்ஜிக்கும் தினகரன்!

மே 19-ஆம் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டபிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அந்த தொகுதிகள் அரசியல் கட்சியினரால் விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தொகுதிகளில், அதிமுக, திமுக, அமமுக என மும்முனை போட்டி நிலவுகிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கட்சி வேட்பாளர்களுக்காக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீதுவை ஆதரித்து பிரச்சாரம் செய்த தினகரன் அமமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியமாகி உள்ள தற்போது திமுக வேட்பாளராகவும் உள்ள செந்தில் பாலாஜியையும், பாஜகவையும் பிடிபிடியென பிடித்து கடுமையாக பிரச்சாரம் செய்தார்.
குறிப்பாக பாஜக குறித்து பேசிய தினகரன் ஒருபோதும் அந்த கட்சியுடன் கூட்டணி இல்லை என தான் தொடர்ந்து கூறிவருவதை குறிப்பிட்டார். தங்களுக்கு பாஜக அளித்து வரும் நெருக்கடிகள் குறித்தும் பேசினார் தினகரன். அப்போது பேசிய அவர், நான் பாஜகவை எதிர்ப்பேன் என தொடர்ந்து கூறி வருகிறேன், நாகூர் தர்காவிலும் சொன்னேன், இப்போது பள்ளப்பட்டியிலும் சொல்கிறேன். என் வாழ்நாளிலேயே எந்த காலகட்டத்திலும் பாஜகவோடு கூட்டணி கிடையாது.
இது ஏதோ உங்களின் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக அல்ல. வெற்றிபெற்றாலும் தோல்வி பெற்றாலும் மக்களை சந்திக்கும்போது நான் தலைகுனியக் கூடாது, யாரும் நம்மை கேள்வி கேட்டுவிடக் கூடாது என்று நினைப்பவன் இந்த தினகரன். யாருக்கும் சி டீம் அல்ல நாங்கள். சிங்கத்தின் தலையாக இருப்போமே தவிர, யாருக்கும் வாலாக இருக்க மாட்டோம் என காட்டமாக பேசினார் தினகரன்.



















