இந்தியா
52 வயதான ராகுல் காந்திக்கு சொந்தமாக வீடு கூட இல்லை: விளாசிய பாஜக!

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் கட்சியின் 85-வது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 52 வயதான தனக்கு சொந்தமாக ஒரு வீடு கூட இல்லை என்று கூறியுள்ளார். இதற்கு பாஜக தரப்பும் பதிலடி ஒன்றை கொடுத்துள்ளது.

#image_title
காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 1997 தேர்தலுக்குப் பிறகு வீட்டில் ஒரு விசித்திரமான சூழல் நிலவியது. நான் அம்மாவிடம் சென்று என்ன நடந்தது என்று கேட்டேன். நாம் வீட்டை விட்டு வெளியேறுகிறோம் என்று அவர் என்னிடம் சொன்னார். நான் அது என் வீடு என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது நம்முடைய வீடு அல்ல, அரசாங்கத்தின் வீடு என்று என் அம்மா சொன்னார்.
எனக்கு இப்போது 52 வயது, இன்னும் எனக்கு வீடு இல்லை. அலகாபாத்தில் இருக்கும் குடும்ப வீடு எங்களுடையது அல்ல. 12, துக்ளக் லேனில் நான் தங்குகிறேன். ஆனால் அது எனக்கு வீடு அல்ல. எனவே நான் பாரத் ஜோடோ யாத்ராவைத் தொடங்கியபோது, எனது பொறுப்பு என்ன என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். அப்போது என் மனதில் ஒரு யோசனை தோன்றியது. யாத்திரையின் போது என்னை சந்திக்க வருபவர்கள் வீட்டில் இருப்பதை போல உணர வேண்டும் என்று எனது அலுவலக நபர்களிடம் கூறினேன்.
யாத்ராவே எங்கள் வீடாக இருக்கும், மேலும் இந்த வீட்டின் கதவுகள் பணக்காரர்கள், ஏழைகள், விலங்குகள் என அனைவருக்கும் திறந்திருக்கும். இது ஒரு சிறிய யோசனைதான் ஆனால் அதன் ஆழத்தை பின்னர் புரிந்துகொண்டேன். யாத்திரையே வீடாக யாத்திரை மாறியதும், மக்கள் என்னிடம் அரசியல் பற்றி பேசவில்லை. பின்னர் எங்கள் சிறிய வீடு காஷ்மீரை அடைந்தபோது, நான் என் வீட்டை அடைந்ததை உணர்ந்தேன் என்றார்.
ராகுல் காந்தியின் உரைக்கு பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, ராகுல் காந்தி 52 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது பொறுப்புகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளார். அவர் கட்சித் தலைவர் பதவியைத் துறந்தார், பின்னர் தனது பொறுப்புகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியுள்ளார். மற்ற காந்தி குடும்ப உறுப்பினர்களைப் போலவே உங்கள் பொறுப்பும் பொறுப்பற்ற அதிகாரம் தான் என்றார். மேலும் பாஜகவின் இரண்டு பிரதமர்களும் தங்கள் அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் தங்கள் கடமைகளை புரிந்து கொண்டனர். 52 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் உணர்ந்ததை எங்கள் இரு பிரதமர்களும் தங்கள் அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் புரிந்துகொண்டனர் என்றார்.