கிரிக்கெட்
மீண்டும் சிறந்த ஃபினிஷர் என நிரூபித்த தல தோனி: தலைவணங்கி மரியாதை செய்த ஜடேஜா!

நேற்றைய மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தான் மீண்டும் ஒரு தலைசிறந்த ஃபினிஷர் என தல தோனி நிரூபித்ததை அடுத்து அவருக்கு தலைவணங்கி கேப்டன் ஜடேஜா நன்றி கூறிய புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நேற்று நடைபெற்ற மும்பை மற்றும் சென்னை அணிகளுக்கிடையிலான போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்து 155 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 19 ஓவர் முடிவில் வெற்றி பெற 17 ரன்கள் தேவை என்ற நிலையில் இருந்தது .
ஆனால் இருபதாவது ஓவரின் முதல் பந்தில் ஒரு விக்கெட் விழ, இரண்டாவது பந்தில் ஒரே ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இதனை அடுத்து 4 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் தல தோனி களத்தில் இருந்தார். அவர் 3-வது பந்தில் சிக்ஸர், 4-வது பந்தில் பவுண்டரி, 5வது பந்தில் 2 ரன்கள் மற்றும் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணிக்கு வெற்றி தேடித் தந்து, தான் எப்போதுமே தலை சிறந்த ஃபினிஷர் என்பதை தல தோனி நேற்று மீண்டும் நிரூபித்துள்ளார்.
இதனை அடுத்து அவருக்கு சக வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் போட்டி முடிந்ததும் மைதானத்திற்கு உள்ளே வந்த ஜடேஜா, தல தோனி முன் தலை வணங்கி தனது மரியாதையை தெரிவித்துக் கொண்டார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.