இந்தியா
அதானி குழும செய்திகளை ஊடகங்கள் வெளியிட கூடாதா? உச்சநீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டிருப்பது என்ன?

அதானி குழும நிறுவனங்கள் குறித்த செய்திகளை ஊடகங்கள் வெளியிட தடை செய்ய வேண்டும் என தாக்கல் செய்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இந்த விசாரணையில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதானி குழும நிறுவனங்கள் குறித்து ஹிண்டன்பர்க் என்ற அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்ட செய்தி காரணமாக அந்நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அதானி குழுமம் மற்றும் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் இந்த வழக்குகளை விசாரிக்க குழு அமைப்பது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது.
இதனை அடுத்து குழு உறுப்பினர்களை தேர்வு செய்வது குறித்து சீல் இடப்பட்ட உரையில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் குழுவில் இடம் பெறும் உறுப்பினர்களை உச்சநீதிமன்றமே முடிவு செய்யும் என்றும் கூறியிருந்தது.
இந்த நிலையில் அதானி குழுமம் மற்றும் ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பான வழக்கில் இறுதி தீர்ப்பு வரும் வரை அதானி குழுமம் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அவர்கள் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சர்மா என்பவர் ஆஜர் ஆனார்.

hinderburg2
ஹிண்டன்பர்க் அறிக்கை மற்றும் அதானி குழுமம் தொடர்பாக செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தலைவிதிக்க வேண்டும் என்றும் ஊடகங்களின் செய்தியால் இந்த வழக்கின் மாண்பு விமர்சிக்கப்படும் வகையில் இருக்கும் என்றும் தெரிவித்தார். ஆனால் இதை ஏற்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மறுத்துவிட்டார். இந்த விவகாரத்தில் ஊடகங்களுக்கு எதிராக எந்தவித தடையும் பிறப்பிக்க முடியாது என்று கூறிய அவர் விரைவில் இந்த வழக்கை முடிக்கக்கூடிய அளவுக்கு விசாரணைகள் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இதனை அடுத்து ஊடகங்கள் அதானி குழும நிறுவனங்கள் குறித்து செய்தி வெளியிட எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.