தமிழ்நாடு
பச்சைப் பச்சையாய் பொய் சொல்கிறார் ஸ்டாலின்: புலம்பும் எடப்பாடி பழனிசாமி!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மக்கள் முன்னிலையில் பச்சைப் பச்சையாய் பொய் சொல்கிறார் என்று பிரச்சாரக் கூட்டத்தில் பேசியுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதல்வர் பழனிசாமி தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அப்படி அவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய போது, ‘மக்களுக்கு என்னென்ன குறை உள்ளதோ அதை என்னிடம் எழுதிக் கொடுங்கள் என்கிறார் ஸ்டாலின்.

அந்த மனுக்களை வாங்கிப் பூட்டி வைத்து விட்டு, அவரது வீட்டுக்குக் கொண்டு சென்று விடுவாராம். தேர்தல் முடிந்து ஆட்சியில் அமர்ந்த பின்னர் அந்தப் பூட்டைத் திறந்து, மனுக்களை வெளியே எடுப்பாராம். அப்போதில் இருந்து 100 நாட்களில் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் குறைகளையும் அவரும் திமுகவும் தீர்த்து வைக்குமாம். இப்படிப் பச்சைப் பச்சையாய் பொய் சொல்லி வருகிறார் ஸ்டாலின்.
10 ஆண்டுகளுக்கு முன்னர் திமுக தானே தமிழகத்தில் ஆட்சியில் இருந்தது. இவர் தானே தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தார். அப்போதெல்லாம் மக்களின் குறைகளைத் தீர்க்கும் எண்ணம் ஸ்டாலினுக்கு ஏன் வரவில்லை. இவருக்கு எப்போதும் நாட்டு மக்களைப் பற்றிய கவலை இருந்ததில்லை. வீட்டு மக்களைப் பற்றித் தான் அவர் அதிகம் கவலைப்பட்டுக் கொண்டிருப்பார்’ என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.


















