சினிமா செய்திகள்
’அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் ரத்து: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கிய நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்டது. இருப்பினும் மீண்டும் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தவுடன் கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கியது.
ஆனால் ’அண்ணாத்த’ படக்குழுவினர் நால்வருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி ஐதராபாத்தில் இருந்த ரஜினிக்கு திடீரென உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணமாகத்தான் அவர் அரசியலில் ஈடுபடுவதில்லை என்ற முடிவையும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மார்ச் 17ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அந்த படபிடிப்பில் ரஜினிகாந்த், நயன்தாரா உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்பட்டது.
இந்த படப்பிடிப்பு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மீண்டும் ரஜினிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தான் இந்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.


















