தமிழ்நாடு
1.5 டன் இனிப்புகளை ‘அபேஸ்’ செய்த ராஜேந்திர பாலாஜி: அமைச்சர் பரபரப்பு புகார்

தமிழ்நாட்டில் 25 பால் ஒன்றியங்களில் முறைகேடு நடந்துள்ளது என்றும் முன்னாள் பால் வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் அளவுக்கு ஆவின் இனிப்பு வகைகள் இலவசமாக தரப்பட்டுள்ளன என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார் தமிழ்நாடு பால் வளத் துறை அமைச்சர் நாசர்.
மேலும் இதுபற்றி விரைவில் விசாரணை நடத்தப்படும் பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

அவர் மேலும், ‘தீபாவளி நேரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு ஒன்றரை டன் அளவுக்கு இனிப்பு வகைகள் சென்றுள்ளன. இது குறித்து எங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த விவகாரத்தை நாங்கள் நிச்சயம் சும்மா விட மாட்டோம். கட்டாயம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை பாயும்’ என்று உறுதிபட கூறியுள்ளார்.
கடந்த சட்ட மன்றத் தொகுதியில் தான் போட்டியிட்ட தொகுதியில் தோற்றார் ராஜேந்திர பாலாஜி. தேர்தல் வரை மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த அவர், தேர்தல் முடிந்தவுடன் தான் பேசியதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். தற்போது அவர் மீது குற்றச்சாட்டும் முன் வைக்கப்பட்டு உள்ளது.
















