உலகம்
செளதி அரேபியாவுக்கும் பரவியது ஒமைக்ரான்: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமைக்ரான் என்ற வைரஸ் படிப்படியாக உலக நாடுகளில் பரவி வரும் நிலையில் தற்போது சவுதி அரேபியாவுக்கும் பரவி விட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி அந்நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
கொரோனா வைரஸின் உருமாறிய வைரஸ்களில் ஒன்றாகிய ஒமைக்ரான் வைரஸ் என்ற வைரஸ் தென் ஆப்பிரிக்கா, பிரேசில், ஹாங்காங், இத்தாலி உள்ளிட்ட ஒருசில நாடுகளில் பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கூட உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா என்ற பகுதிக்கு வந்த நான்கு வெளிநாட்டு சுற்றுப் பயணிகளுக்கு ஒமைக்ரான் வைரஸ் அறிகுறி இருந்ததாகவும் இதனை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தங்கள் நாட்டில் பரவ விடாமல் தடுப்பதற்காக இந்தியா உள்பட உலக நாடுகள் அனைத்தும் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பதும் குறிப்பாக சர்வதேச விமான நிலையங்களில் வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்த பட்ட பின்னரே அவர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டிருந்தும் சவுதி அரேபியாவில் முதல் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்புடைய நபர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவிலிருந்து சவுதி அரேபியா திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவரை தனிமைப்படுத்தி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தகவல் தெரிவித்துள்ளது.


















