இந்தியா
மக்களை காக்க மத்திய அரசு தவறிவிட்டது: அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் ஆதங்கம்!

இந்தியாவில் கொரனோ வைரஸ் முதல் அலை ஓய்ந்து இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும் நிலையில் மக்களைக் காப்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்து விட்டதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கணவர் பர்கலா பிரபாகர் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய பிரதமராக மோடி பதவி ஏற்றதில் இருந்து மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதாரம் மேதையுமான பர்கலா பிரபாகர் அவர்கள் தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மத்திய அரசை அவர் கடுமையாக சாடியுள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையால் இந்தியாவில் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது என்றும், ஆனால் மத்திய அரசு அதனை மறந்து தனது பொறுப்புகளை துறந்து, பொறுப்பற்ற முறையில் செயல்பட்டுக் கொண்டு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
நிறைய குடும்பங்கள் வருமானத்தை இழந்து வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டதாகவும் பலர் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள பிரபாகர், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நானும் எனது சொந்தங்களையும் நண்பர்களையும் இருந்திருக்கின்றேன் என்றும் அது மிகப்பெரிய இழப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
மருத்துவமனையின் வாசலில் நீண்ட வரிசையில் மக்களின் மரண ஓலங்கள், எரியும் பிரேத குவியல்கள் போன்ற காட்சிகள் பதபதைக்க வைத்ததாகவும் அரசியல் தலைவர்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் இதைப் பற்றி கொஞ்சமும் அக்கறை இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.
பிரதமர், மத்திய அமைச்சர்கள், முதல்வர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள் என விழிப்புணர்வு ஊட்ட வேண்டி அனைவரும் லட்சங்களில் மக்களை கூட்டி தேர்தல் பிரச்சாரம் செய்ததும், இன்னொருபுறம் கும்பமேளாவில் லட்சக்கணக்கானவர்களை கூட அனுமதித்ததும் மிகப் பெரிய தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரின் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.