தமிழ்நாடு
பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரொக்கப்பணம்: சுற்றறிக்கையில் திடீர் திருப்பம்!

கூட்டுறவு சங்க பதிவாளர் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து மண்டல பதிவாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இடம்பெற்றிருந்த ரொக்கத்தொகை என்ற சொல் நீக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மண்டல பதிவர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
அதில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ஆகியவை நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுவதை நாள் தோறும் கண்காணிக்க வேண்டும் என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இதனால் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத்தொகை வழங்கப்படும் என்றும் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் ரொக்கம் வழக்கம்ப்படும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் தொடர்பான சுற்றறிக்கையில் இடம்பெற்றிருந்த ரொக்கத் தொகை என்ற சொல் நீக்கப்பட்டு தற்போது அனுப்பப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் பொங்கல் பரிசு தொகுப்புகளை மட்டும் நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படுவதை நாள் தோறும் கண்காணிக்க வேண்டும் என்று மாற்றப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரொக்கம் வழங்கப்படாது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் பொங்கல் பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்படும் என இடம்பெற்றுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.














