தமிழ்நாடு
நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்? இனிமேல் தான் க்ளைமேக்ஸே இருக்கு!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் மார்ச் 1-ஆம் தேதி நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு அடங்கிய புகைப்பட கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தார் அமைச்சர் சேகர்பாபு. இதனை திறந்து வைக்க மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் வந்திருந்தார். அவர் திமுக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு அளித்த பதில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

#image_title
சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்ட கமல்ஹாசன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மாபெரும் தலைவரின், தந்தையின் மகனாக இருக்கும்போது சந்தோஷம் நிறைய உண்டு என்றாலும் சவால்களும் நிறைய உண்டு. சந்தோஷத்தையும் அனுபவித்து சவால்களையும் ஏற்று படிப்படியாக தொண்டனாக, இளைஞரணியின் தலைவராக, சட்டமன்ற உறுப்பினராக, மேயராக, துணை முதல்வராக, முதல்வராக உயர்ந்துள்ளார் இது அவரது பொறுமையையும் திறமையையும் காட்டுகிறது என்றார்.
தொடர்ந்து பேசிய அவரிடம் நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைப்பதற்கான அறிகுறியாக இதை எடுக்கலாமா என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், இது இப்போது பேச வேண்டிய நேரமில்லை. சீன் பை சீனாகத்தான் கதையை நகர்த்த வேண்டும். க்ளைமேக்ஸ் என்னவென்று இப்போதே கேட்கக்கூடாது. இப்போது சொல்ல வேண்டியது முதல்வருக்கு அட்வான்ஸ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறினார்.
முன்னதாக ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.