தமிழ்நாடு
ஆணழகன் போட்டியில் கலந்துகொண்ட 21 வயது இளைஞர் மயங்கி விழுந்து மரணம்…

கடலூர் மாவட்டத்தில் ஆணழகன் போட்டியில் கலந்து கொண்ட சேலத்தை சேர்ந்த 21 வயதான ஹரிஹரன் என்ற இளைஞர் பயிற்சியின் போது மயங்கி விழுந்து அந்த இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

#image_title
தமிழ்நாடு மாநில அளவிலான ஆணழகன் போட்டி ஒன்று கடலூர் மாவட்டம், வடலூர் பண்ருட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலிருந்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து நூறுக்கும் அதிகமான இளைஞர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர். இதில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான ஹரிஹரன் என்ற இளைஞர் 75 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்டார்.
75 கிலோ எடைப்பிரிவில் மேடை ஏறத்தயாரான ஹரிஹரன் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டு சுருண்டு விழுந்தார். இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இதனையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறை விசாரணையை ஆரம்பித்துள்ளது. 21 வயதான ஹரிஹரன் போட்டியில் பங்கேற்பதற்காக அளவுக்கதிகமான உடற்பயிற்சியில் ஈடுபட்டாரா அல்லது உணவுக்கட்டுப்பாடுடன் உடற்பயிற்சி செய்தாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.