சினிமா செய்திகள்
ஏன் எப்ப பார்த்தாலும் நல்ல பேர் வாங்கனும்ன்னு அலையிறிங்க: ஜோதிகாவின் ‘உடன்பிறப்பே’ டிரைலர்!

நடிகை ஜோதிகாவின் 50-வது திரைப்படமான ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் அமேசான் ஓடிடியில் வரும் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி உள்ளது.
சமுத்திரகனிக்கு ஜோடியாக ஜோதிகா நடித்துள்ள இந்த படத்தில் ஜோதிகாவின் சகோதரராக சசிகுமார் நடித்துள்ளார். ஜோதிகா, சமுத்திரகனி மற்றும் சசிகுமார் ஆகிய மூவரின் உறவுகள் குறித்த நெகிழ்ச்சியான கதை அம்சம் தான் இந்த படம் என்று ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.
குறிப்பாக சசிகுமார் ஊர் விவகாரங்களில் தலையிட்டு வன்முறையை செய்து வருவதாகவும் அதனை சமுத்திரகனி கண்டிப்பதாகவும் இதனால் ஜோதிகா மற்றும் சசிகுமார் இடையே பேச்சுவார்த்தை நின்று போவதாகவும் கதை செல்கிறது. ஒரு கட்டத்தில் சசிகுமாரின் வன்முறை செயல்களால் சமுத்திரகனி-ஜோதிகாவின் குழந்தைகள் பாதிக்கப்படுவதும் அதனால் ஏற்படும் விளைவுகள் தான் இந்த படத்தின் கதை என்று தெரியவருகிறது. ’ஒரு வன்முறை என்றைக்குமே தீர்வை கொடுக்காது, மற்றும் ஏன் எப்ப பார்த்தாலும் நல்ல பேர் வாங்கனும்ன்னு அலையிறிங்க ஆகிய வசனங்கள் கவனத்தை பெறுகிறது.
ஜோதிகா, சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகிய மூவரும் போட்டி போட்டு நடித்து இருக்கும் இந்த திரைப்படத்தை இரா. சரவணன் என்பவர் இயக்கியுள்ளார். டி இமான் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக அமைந்துள்ளதாக தெரிகிறது. எனவே இந்த திரைப்படம் மேலும் ஒரு வெற்றி படமாக சூர்யா ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான ’ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே.