தமிழ்நாடு
இந்தியாவின் முதல் விமான நிலைய திரையரங்கம்.. சென்னையில் தொடக்கம்.. கட்டணம் எவ்வளவு?

இந்தியாவின் முதல் விமான நிலைய திரையரங்கம் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த திரையரங்கை இந்தியாவின் மிகப் பெரிய திரையரங்கு நிறுவனமான பிவிஆர் நிறுவியுள்ளது.
இந்த விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திரை அரங்கிற்கு பிவிஆர் ஏரோ ஹப் என பெயரிடப்பட்டுள்ளது.
அண்மையில் சென்னை விமான நிலையத்தில் தொடங்கப்பட்ட பல அடுக்கு பார்க்கிங் கட்டிடத்தில் இந்த திரையரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
பிவிஆர் ஏரோ ஹப்பில் மொத்தம் 5 திரைகள் உள்ளன. மொத்தம் 1155 இருக்கைகள் உள்ளன. பிவிஆர் நிறுவனத்திற்குச் சென்னையில் இதனுடன் சேர்த்து 12 இடங்களில் திரையரங்குகள் உள்ளன. இந்தியா முழுவதும் 182 இடங்களில் 908 திரையரங்குகள் பிவிஆர் நிறுவனத்திற்கு உள்ளது. தமிழ்நாட்டில் 14 இடங்களில் பிவிஆர் நிறுவனத்திற்குத் திரையரங்குகள் உள்ளன.
டால்பி ஆடம்ஸ், ரியல்ட் 3டி, 2கே ஆர்ஜிபி லேசர் ப்ரொஜக்டர் கொண்ட திரையரங்காக இது அமைக்கப்பட்டுள்ளது. எல்லா திரையரங்குகளில் உள்ளது போலவே ஸ்னாக்ஸ் கவுண்டர்கள், கழிவறைகள் என எல்லா வசதிகளும் இங்கும் இருக்கும்.
விமான நிலையங்களில் வெளியில் கிடைப்பதை விட பல பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால் ஏரோ ஹப் திரையரங்கில் வெளியில் உள்ள திரை அரங்குகளில் எவ்வளவு கட்டணமோ அதுவே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இனி விமான நிலையம் செல்லும் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் ஒரு படத்தைப் பார்த்துவிட்டு பயணத்தைச் செய்யலாம். நள்ளிரவு விமானங்களில் செல்பவர்கள் மாலை காட்சி புக் செய்து பார்த்துவிட்டு நள்ளிரவு விமானத்தைப் பிடிக்கலாம்.