இந்தியா
கொரோனா தடுப்பூசியை வேகமாகப் பெறுவதில் அமெரிக்காவையே பின்னுக்குத் தள்ளிய இந்தியா!

கொரோனா தடுப்பூசியை வேகமாகப் பெறுவதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை இந்தியா பின்னுக்குத் தள்ளியுள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இந்தியாவுக்கு முன்பே கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இந்தியாவில் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதில் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வளரும் மற்றும் ஏழை நாடுகள் கொரோனா தடுப்பூசியைப் பெறுவதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்டது.
கொரோனா பரிசோதனை கருவிகள் வாங்கும் போது அமெரிக்கா செய்தது அனைவருக்கும் தெரியும். கூடுதலாகப் பணம் வழங்கிப் பிற நாடுகளுக்குச் செல்லும் கொரோனா பரிசோதனை கருவிகளை எல்லாம் தங்கள் நாட்டுக்குத் திருப்பிக்கொண்டது.
அதே போல ஒரு நிலை கொரோனா தடுப்பூசிக்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால் அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை விட வேகமாக இந்தியா கொரோனா தடுப்பூசிகளை வாங்கியுள்ளது.
இந்தியாவில் முதற்கட்டமாக 30 கோடி கொரோனா தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து விநியோகிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவில் 10 நாளில் 10 லட்சம் தடுப்பூசி வாங்கப்பட்டுள்ளது. இதுவே ஸ்பெயினில் 12 நாட்களிலும், இஸ்ரேலில் 14 நாட்களிலும், பிரிட்டனில் 18 நாட்களும், இத்தாலியில் 19 நாட்களும், ஜெர்மனியில் 20 நாட்களும், ஐக்கிய அமீரகத்தில் 27 நாட்களும் ஆனது.
ஆனால், இந்தியாவுக்கு 10 லட்சம் கொரோனா தடுப்பூசி 6 நாட்களில் கிடைத்துள்ளது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். அதற்கு இந்தியாவிலேயே சீரம் இன்ஸ்டியூட் தயாரித்து விநியோகிக்கும் கோவிஷீல்ட் மற்றும் பாரத் பையோடெக் தயாரிக்கும் கோவேக்ஸின் உள்ளிட்ட தடுப்பூசிகள் அதிகம் கொள்முதல் செய்யப்பட்டதே காரணம் என்று கூறப்படுகிறது.




















