உலகம்
கூகுளுக்கு வேலைக்கு ஆள் எடுப்பவரே வேலைநீக்கம்.. அதுவும் எப்படி தெரியுமா?

கூகுள் நிறுவனம் சமீபத்தில் 12000 ஊழியர்களை வேலைநீக்கம் செய்த நிலையில் வேலை இழந்த ஊழியர்கள் தங்களது சமூக வலைதளங்களில் தாங்கள் எவ்வாறு வேலை நீக்கம் செய்யப்பட்டோம் என்பது குறித்து அனுபவத்தை தெரிவித்து வருகின்றனர்.
நிறைமாத கர்ப்பிணி ஒருவர் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவும் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு செல்வதற்கு தயாராக இருந்த ஒருவர் தனது வீடு கார் அனைத்தையும் விற்றுவிட்ட நிலையில் திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவும் தங்களது அனுபவங்களை பரிதாபமாக பதிவு செய்திருந்தனர்.
அந்த வகையில் கூகுள் நிறுவனத்திற்கு வேலைக்கு ஆள் எடுக்கும் ஒருவரே வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவும் அதுவும் தான் தனது நிறுவனத்திற்காக போன் அழைப்பு ஒன்றில் பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென தனது போன் அழைப்பு கட் செய்யப்பட்டு வேலைநீக்கம் குறித்த செய்தி வெளியானதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் நிறுவனத்தின் அயர்லாந்து கிளையில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்னர் தான் வேலையில் பணி அமர்த்தப்பட்டதாகவும் தான் ஒரு கனவு நிறுவனத்தில் வேலை செய்வதாக மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்ததாகவும் கூறினார். தான் கற்றுக் கொண்ட அனைத்து விஷயங்களையும் கூகுள் நிறுவனத்திற்காக பயன்படுத்தினேன் என்றும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு எனது பங்களிப்பை அளித்தேன் என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்திற்கு மிகச்சிறந்தவர்களை வேலைக்கு எடுத்து நிறுவனத்தை மென்மேலும் வளர்த்துக் கொண்டிருந்தபோது திடீரென நான் வேலை நீக்க செய்யப்பட்டதாக தகவல் வெளியானது என்றும் அதுவும் கணினி மூலம் வேலைக்கு ஆள் அமர்த்துவது குறித்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருந்த போது திடீரென எனது அழைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் நான் வேலை நீக்கம் செய்யப்பட்டேன் என்ற செய்தி எனக்கு அனுப்பப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நான் கூகுளில் கற்றுக்கொண்ட அனைத்தையும் இன்னொரு நிறுவனத்தில் பயன்படுத்த தயாராக இருக்கிறேன் என்றும் என்னை வேலைக்கு எடுக்கும் நிறுவனத்தை அடுத்த நிலைக்கு கொண்டு வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு விரைவில் வேலை கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.