இந்தியா
இரண்டாவது டோஸ் எடுத்து கொண்ட அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவியது. இதனை அடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாகவும் மத்திய மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகவும் கொரோனா வைரஸ் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது.
தற்போது ஒரு சில மாநிலங்கள் தவிர தமிழகம் உள்பட பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்ட நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் இரண்டாம் டோஸ் போடும் பணி தொடங்கப்பட்டது. பிரதமர் மோடி உள்பட பலர் இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசியை போட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து தற்போது குஜராத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது டோஸ் எடுத்துக்கொண்ட சுகாதார அதிகாரிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த சுகாதார அதிகாரி ஒருவர் கடந்த ஜனவரி மாதம் கொரோனா வைரஸ் முதல் டோஸ் எடுத்து கொண்டார். அவருக்கு சமீபத்தில் இரண்டாவது டோஸூம் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு நேற்று காய்ச்சல் இருந்ததாகவும் இதனை அடுத்து அவருக்கு சோதனை செய்ததில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. கொரோனா வைரஸ் தடுப்பூசி இரண்டு டோஸ்கள் செலுத்தப்பட்ட பின்னரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.




















