தமிழ்நாடு
ஓபிஎஸ் மகன் எம்பியாகவோ, மந்திரியாகவோ பதவியேற்க இடைக்கால தடை விதிக்க ஈவிகேஎஸ் இளங்கோவன் வழக்கு!

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேனி தொகுதியில் போட்டியிட்ட துணை முதல்வர் ஓபிஎஸின் மகன் ரவீந்திரநாத் குமார் மட்டும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் ஆகியோர் தோல்வியை தழுவினர்.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேனி தொகுதியில் போட்டியிட்ட எனக்காக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதற்காக அவரை சந்தித்து நன்றி தெரிவித்துக்கொண்டோம். ரவீந்திரநாத் குமார் எம்பியாகவோ, மந்திரியாகவோ பதவியேற்க இடைக்கால தடை விதிக்கக்கோரி இன்னும் ஓரிரு நாளில் வழக்கு தொடர உள்ளோம் என்றார்.
தேர்தல் முடிந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் திடீரென இரவில் வந்து இறங்கியது, வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள், பணப்பட்டுவாடா என பல குற்றச்சாட்டுகள் உள்ளதால் இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதனால் ஓபிஎஸ் தரப்பு சற்று கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.



















