தமிழ்நாடு
திமுக என்னும் கிரிக்கெட் அணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் ருசிகர பேச்சு!

தமிழக சட்டசபையில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுகவை கிரிக்கெட் அணியாக வர்ணித்து பேசியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

#image_title
இதில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் வடக்கே இருந்து இங்கு வந்து யாரும் வென்ற வரலாறு கிடையாது. இப்போது யார் யாரோ தமிழ்நாட்டை வெல்ல முயற்சி செய்கிறார்கள். அவர்களின் விளையாட்டு இந்திய ஒன்றியத்தின் எந்த மாநிலத்தில் வேண்டுமானால் எடுபடலாம், ஆனால், தமிழ்நாட்டில் என்றுமே எடுபடாது. அதற்கு காரணம், தமிழ்நாட்டிற்கு கிடைத்துள்ள திமுக எனும் அணியும், அதன் கேப்டனான முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும் தான் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர், பேராசிரியர் ஆகியோர் எங்கள் அணிக்கு கிடைத்த ஒப்பற்ற பயிற்சியாளர்கள். எந்த அணி எங்களுக்கு எதிரான அணி, யாருடன் எந்த நேரத்தில் நாங்கள் மோத வேண்டும் என்று தந்தை பெரியார் சொல்லிக் கொடுத்துள்ளார். ஒற்றுமை, கடமை, கட்டுப்பாடு, கண்ணியத்தோடும் எப்படி ஒரு அணி விளையாட வேண்டும் என பேரறிஞர் அண்ணா சொல்லிக்கொடுத்துள்ளார்.
எந்த பந்தை அடிக்கவேண்டும். எந்தப் பந்தை அடிக்கக்கூடாது என முத்தமிழ் அறிஞர் கலைஞர் சொல்லிக்கொடுத்துள்ளார். எப்போது பொறுமையாக டிஃபன்ஸ் ஆடவேண்டும். எப்போது முன்னேறிச் சென்று சிக்ஸர் அடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுத்து வருகிறார் எங்கள் அணி தலைவரான முதல்வர் என பேசினார். இவரது இந்த பேச்சு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.