தமிழ்நாடு
புத்தியில்லாத அமைச்சர், இதுகூட தெரியாத முண்டம்: விட்டு விளாசிய துரைமுருகன்!

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமாக இருந்த மறைந்த கலைஞர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குறிய வார்த்தைகளில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் அதிரடி பதிலடி ஒன்றை கொடுத்துள்ளார்.
கோவில்பட்டியில் அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, கருணாநிதிக்கு அரசு மரியாதை கிடைத்து இருக்கிறது என்றால் அது அதிமுக போட்ட பிச்சை. அதிமுக அரசு போட்ட பிச்சையால்தான் இன்று கலைஞரின் சமாதியே மெரினாவில் இருக்கிறது என சர்ச்சைக்குறிய வகையில் பேசினார்.
இதனையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அண்ணா அறிவாலயத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த திமுக பொருளாளர் துரைமுருகன், அமைச்சருக்குரிய தகுதியையும், கண்ணியத்தை இழந்து, மிகவும் கீழ்த்தரமான முறையில் பேசியிருக்கிறார் கடம்பூர் ராஜு. நாங்கள் நீதிமன்றம் சென்றுதான் அதற்கான உரிமையைப் பெற்றோம். இடத்தை ஒதுக்கினோம் என்று அமைச்சர் சொன்னால் அவருக்குப் புத்தியில்லை என்றுதான் அர்த்தம்.
நாங்கள் அண்ணாவின் நினைவிடம் பக்கத்தில்தான் இடம் கேட்டோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதை மறுத்துவிட்டார். நீதிமன்றத்தின் ஆணையினால் தானே மெரினாவில் இடம் கிடைத்தது. கலைஞருக்கு என்ன அரசு மரியாதையை நீங்கள் கொடுத்தீர்கள், ராணுவ மரியாதை என்ன உங்க அப்ப வீட்டு சொத்தா? ராணுவ மரியாதையைக் கொடுத்தது மத்திய அரசு. ராணுவ மரியாதையை மத்திய அரசு கொடுக்குமா, மாநில அரசு கொடுக்குமா என்றுகூட தெரியாத முண்டம் நீங்க.
அதிமுக அமைச்சர்களால் இடம் கிடைக்கவில்லை. அவர்கள் எங்களுக்குத் தொல்லைதான் கொடுத்தார்கள். கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைப்பதை திமுக நீதிமன்றம் சென்று பெற்றது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். இதெல்லாம் தெரியாமல் ஓர் அமைச்சர் இருக்கிறார் என்றால் அவர் எதற்கும் தகுதியற்றவர் என அதிரடியாக விளாசினார் அவர்.



















