தமிழ்நாடு
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி ஒதுக்கீடு பணிகள்!

திமுக கூட்டணியில் இணைந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த பணிகள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில் தற்போது எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது குறித்த பணிகளில் திமுக தலைமை இயங்கி வருகிறது.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சிக்கு மணப்பாறை, பாபநாசம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த இரண்டு தொகுதிகளிலும் அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கட்சிக்கு மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அக்கட்சிக்கு திருச்செங்கோடு, சூலூர், பெருந்துறை ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொகுதிகள் ஒடுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. ஒரே தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரஸ் கேட்பதால் இந்த சிக்கல் என தெரிகிறது.
ஆனால் அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அக்கட்சிக்கு பவானிசாகர், வால்பாறை, சிவகங்கை, திருப்பூர் வடக்கு, திருத்துறைப்பூண்டி, தளி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் திமுக கூட்டணியில் உள்ள தமிழர் வாழ்வுரிமை கட்சியின் வேல்முருகனுக்கு பண்ருட்டி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


















