தமிழ்நாடு
ஓபிஎஸ் எங்கு போட்டியிட்டாலும் டெபாசிட் பறிபோகும்: தினகரன் சூளுரை!

துணை முதல்வரும் அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் அவரது டெபாசிட் பறிபோகும் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூளுரைத்துள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓபிஎஸ், சசிகலா குடும்பத்தை மீண்டும் அதிமுகவில் திணிக்க டிடிவி தினகரன் முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டினார். மேலும் அது நிச்சயம் வெற்றி பெறாது என குறிப்பிட்டார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ளார் டிடிவி தினகரன்.
பதவி இல்லையென்றவுடன் தியானத்துக்கு சென்ற ஓபிஎஸ் தன்னுடைய குடும்பத்தை கட்சிக்குள் புகுத்துவதற்காகத்தான் ஒரு குடும்பத்தின் பிடியில் நாங்கள் இருக்க மாட்டோம் என்று கூறுகிறார். துரோகத்தின் ஒரு பக்கம் பன்னீர்செல்வமும் மற்றொரு பக்கம் எடப்பாடி பழனிசாமியும் இருப்பார்கள் என்றார் தினகரன்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், பன்னீர்செல்வம் யாருடைய ஏஜெண்டாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் பன்னீர்செல்வம் தமிழகத்தில் எங்கு போட்டியிட்டாலும் அவருக்கு டெபாசிட் பறிபோகும், மக்கள் அவரைத் தோற்கடித்துவிடுவார்கள் என்றார் அதிரடியாக.



















