உலகம்
துருக்கி பூகம்பம்.. இதுவரை 2300 பேர் பலி, 10 ஆயிரம் பேர் பலியாக வாய்ப்பு என அதிர்ச்சி தகவல்..!

துருக்கியில் இன்று காலை ஏற்பட்ட பூகம்பத்தில் இதுவரை 2,300 பேர் பலியாகி இருப்பதாகவும் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைவிட அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் இன்று அதிகாலை ஏற்பட்ட பூகம்பம் 7.8 ரிக்டர் என்ற அளவில் இருந்ததாக கூறப்பட்டது. இந்த பூகம்பம் காரணமாக சுமார் 3000 கட்டிடங்கள் சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்ததாகவும் இந்த கட்டிடங்களின் இடுப்பாடுகளுக்கு இடையே சிக்கிய உடல்நிலை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

இதுவரை 2300 பேருக்கும் அதிகமாக பலியாகி உள்ளதாகவும் இன்னும் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனை நிரம்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் துருக்கியில் ஏற்பட்ட பூகம்பம் குறித்த செய்தி அறிந்ததும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக இரண்டு மருத்துவ குழுக்களை துருக்கிக்கு அனுப்ப உள்ளதாகவும் அவர்களுடன் மருத்துவ உபகரணங்கள் மற்றும் அவசர மருந்துகளும் அனுப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இன்று மாலை திடீரென மீண்டும் துருக்கியில் பூகம்பம் ஏற்பட்டதாகவும் இது 7.5 ரிக்டர் அளவில் இருந்ததை எடுத்து நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி அடுத்த சில மணி நேரங்களில் சிரியாவில் உள்ள தலைநகர் டமாஸ்கஸ் என்ற பகுதியிலும் பூகம்பம் ஏற்பட்டதாக தெரிகிறது.
அடுத்தடுத்து தொடர்ச்சியாக பூகம்பங்கள் ஏற்பட்டு வருவதை அடுத்து பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பூகம்பத்தின் மொத்த இறப்பு எண்ணிக்கை 10,000 வரை எட்டும் என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலநடுக்கம் துருக்கியின் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது என்றும், மேலும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியைத் தாக்கிய மிக வலிமையான பூகம்பங்களில் ஒன்றாகும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) தெரிவித்துள்ளது.

















