உலகம்
2 வாரங்களுக்கு பின் துருக்கி, சிரியாவில் மீண்டும் நிலநடுக்கம்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பயங்கர நில நடக்கும் காரணமாக சுமார் 50,000 பேர் பலியாகினர் என்பதும் 70,000 அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்பதையும் பார்த்தோம். அதுமட்டுமின்றி ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகி விட்டதை அடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு திடீரென மீண்டும் துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நில நடக்கும் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டு மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட 7.8 என்ற ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் காரணமாக துருக்கி மற்றும் சிரியா ஆகிய இரண்டு நாடுகளுமே மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்ததே. பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருவதாகவும் உணவு உடை தண்ணீர் உள்பட அத்தியாவசிய தேவைகள் கூட இல்லாமல் பொதுமக்கள் கஷ்டப்படுவதாகவும் நேற்று வரை கோடீஸ்வரராக இருந்தவர்கள் இன்று திடீரென ஒரு ரூபாய் கூட இல்லாமல் சிக்கலில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்திலிருந்து மீள முடியாத நிலையில் இருக்கும் துருக்கி மற்றும் சிரியா மக்களை மீண்டும் அச்சுறுத்தும் வகையில் நேற்று இரவு அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. துருக்கி மற்றும் சிரியா எல்லை பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் பூமிக்கு இரண்டு கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் ரிக்டர் அளவில் இது 6.3 என பதிவானதாகவும் ஐரோப்பியர் மத்திய தரை கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தெற்கு தொகுதியில் உள்ள நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், துருக்கி மட்டுமின்றி அண்டை சிரியா, எகிப்து மற்றும் லெபனான் வரை இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும் பல கட்டடங்கள் ஆட்டம் கண்டதாகவும் கூறப்படுகிறது.

புதிதாக ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இதுவரை மூன்று பேர் கொல்லப்பட்டனர் என்றும் 213 பேர் காயம் அடைந்துள்ளனர் என்றும் துருக்கி உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் புதிதாக ஏற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளின் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து தொடர்ச்சியாக துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதை அடுத்து அந்நாட்டில் வாழும் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


















