தமிழ்நாடு
முதல்வரின் ஆக்சிஜன் கோரிக்கை: இருமடங்காக ஒதுக்கியது மத்திய அரசு

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் இன்று ஒரே நாளில் 27 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் தெரிந்ததே.
இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் உடனடியாக தமிழகத்திற்கு அதிக ஆக்ஸிஜனை ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்த கடிதம் கிடைத்தவுடன் பிரதமர் மோடி தமிழகத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு அளவு அதிகரித்து உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இதுவரை 220 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 419 மெட்ரிக் டன் ஆக்சிஜனை அதிகரித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கிட்டத்தட்ட இதுவரை வந்த ஆக்சிஜன் அளவிலிருந்து இருமடங்கு ஆக்சிஜன் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இந்த அளவு ஆக்சிஜன் போதாது என்றும் இன்னும் அதிகமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசின் தரப்பில் இருந்து கோரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.















