இந்தியா
அந்தமான் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவு எவ்வளவு தெரியுமா?

இன்று அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் உள்ள வேலூரிலும் மற்றும் இந்தியாவில் உள்ள சில பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக திடீர் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று அதிகாலை அந்தமான் நிக்கோபார் தீவுகளில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்டுள்ளதாகவும் அந்தமான் நிகோபார் தீவின் தலைநகர் போர்ட் பிளேயர் இருந்து தென்கிழக்கு பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று அதிகாலை 05.30 மணிக்கு கடலின் 100 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சுனாமி ஏற்படுமா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதும் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அந்தமான் நிக்கோபார் தீவில் உள்ள பல பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும், இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் பதட்டத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



















