தமிழ்நாடு
ஜெயலலிதா இல்லாததால் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தோம்: அன்புமணி விளக்கம்!

மக்களவை தேர்தல் விரைவில் வர உள்ளதால் இதனை சந்திக்க தமிழகத்தில் அதிமுக, பாமக, பாஜக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்நிலையில் தாங்கள் ஏன் அதிமுக உடன் கூட்டணி அமைத்தோம் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
திராவிட கட்சிகளுடன் இனிமேல் கூட்டணி இல்லை என பாமக கூறி வந்தது. மேலும் ஆளும் அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தது. அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் பட்டியல் புகாரை ஆளுநரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது. இவ்வாறு அதிமுக மீது கடுமையான போக்கை கடைபிடித்து வந்த பாமக தற்போது அதிமுக உடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை சந்திக்க ஒப்பந்தம் போட்டுள்ளது.
இந்த அதிமுக, பாமக இடையே கூட்டணி அமைந்ததும் இதனை பொருந்தா கூட்டணி என பலரும் விமர்சித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் இந்த கூட்டணி எள்ளிநகையாடப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பாமக ஏன் அதிமுக உடன் கூட்டணி அமைத்தது என்பதற்கான விளக்கத்தை அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து கூறியுள்ளார்.
அதில், மதுவிலக்கு, விவசாய கடன் ரத்து, காவிரி படுகையில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நீட் தேர்வு உள்ளிட்ட திட்டங்கள் வரக்கூடாது என்ற கோரிக்கையை பார்த்துக்கொள்வதாக முதல்வர் தெரிவித்துள்ளார். எங்களுடைய கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறியதால் கூட்டணி அமைக்கப்பட்டது.
2011-இல் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டோம் என சொன்னது உண்மைதான், அதை மறுக்கவில்லை. ஆனால் அப்போது இருந்த சூழல், தற்போது இல்லை. இப்போது இரு பெரும் தலைவர்களும் இல்லை. அதனால் வியூகத்தை மாற்றியுள்ளோம் என்றார். இருபெரும் தலைவர்கள் என அன்புமணி கூறியது ஜெயலலிதா மற்றும் கலைஞர் கருணாநிதி. மேலும், தமிழகத்தில் இனி எந்த ஒரு கட்சியும் தனியாக போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதால் தான் கூட்டணி அமைத்தோம் என்றார் அன்புமணி.


















