சினிமா செய்திகள்
சுப்பிரமணியன் சுவாமியை திடீரென சந்தித்த ரஜினி மகள்: என்ன காரணம்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் திடீரென இன்று டெல்லியில் சுப்ரமணியன் சுவாமி அவர்களை சந்தித்து பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாஜகவின் ஆதரவாளர் என்பதும் பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட பல பிரபலங்கள் அவருக்கு நெருக்கமானவர்கள் என்பதும் தெரிந்தது. அது மட்டுமின்றி காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளிலும் அவருக்கு நண்பர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை பாஜக பிரபலம் சுப்பிரமணியன் சுவாமி பல நேரங்களில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் என்றும் ஒரு சில நேரம் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று திடீரென ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தனுஷ் டெல்லியில் சுப்பிரமணிய சுவாமியை சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் சுப்பிரமணியசாமி ஆகிய இருவருமே தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்யவில்லை என்றாலும் ட்விட்டர் பயனாளி ஒருவர் பதிவு செய்த புகைப்படத்தை சுப்பிரமணியன் சாமி ரீட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சந்திப்பு பல்வேறு அரசியல் யூகங்களை ஏற்படுத்தி உள்ளதாகவும் பாஜக தலைமை மீது அதிருப்தியுடன் இருக்கும் சுப்பிரமணியசாமியை ரஜினியின் மகள் சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதாகவும் டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் அடுத்த முறை சென்னைக்கு வரும்போது ரஜினியை சந்திக்கிறேன் என்றும் ஐஸ்வர்யா தனுஷிடம் சுப்பிரமணியசாமி சொல்லி அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.


















