தமிழ்நாடு
20 மணி நேர பயணம்: சென்னை வந்தவுடன் சசிகலா செய்த முதல் வேலை இதுதான்!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நேற்று காலை 7.30 மணிக்கு பெங்களூரில் இருந்து கிளம்பிய நிலையில் சற்று முன்னர் அவர் 20 மணி நேர பயணத்திற்குப் பின்னர் சென்னை வந்தடைந்தார். பெங்களூரில் இருந்து 20 மணி நேர பயணத்திற்குப் பின்னர் இன்று அதிகாலை சென்னை வந்தடைந்த சசிகலா 4:30 மணிக்கு ராமாவரம் தோட்டத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த உடன் ராமாபுரம் இல்லத்தில் இருந்து கிளம்பிய அவர், தி நகரில் உள்ள ஹபிபுல்லா சாலை சென்று அங்குள்ள இளவரசியின் மகள் கிருஷ்ண பிரியாவின் இல்லத்திற்கு வந்தடைந்தார். அங்கு அவர் சில நாட்கள் ஓய்வு எடுப்பார் என்றும் அதன் பின்னர் அவர் நிரந்தரமாக தங்கும் இடம் குறித்த தகவல் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.
முன்னதாக சென்னை எல்லைக்கு வந்தவுடன் சசிகலாவின் காருக்கு மலர்களால் அபிஷேகம் செய்து அமமுகவினர் அமர்க்களப்படுத்திவிட்டனர் என்பதும், இது குறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சசிகலாவின் சென்னை வருகைக்கு பின் அரசியலில் என்ன மாற்றம் ஏற்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்


















