சினிமா செய்திகள்
நாளும் நம் பசி தீர்க்க பாடுபடும் விவசாயிகளுக்காகக் குரல் கொடுத்த உழவர்கள்!

டெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்திய விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு இந்திய அரசியல் கட்சிகள் மட்டுமின்றி கனடா பிரதமரும் ஆதரவு கொடுத்துள்ளார்.
விவசாயிகளின் இந்த போராட்டம் இந்த அளவுக்கு வலுப்பெற்று வரும் போது ஏன் ஒரு தமிழ் நடிகர்கள் கூட அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்தது.
இந்தியாவில் ஒரு பிரச்சனை என்றால், திரை நடிகர்கள் ஏன் அதற்காகக் குரல் கொடுக்கவில்லை என்பதும், அவர்களை அரசியலுக்கு அழைப்பதும் இயல்பான ஒன்றுதானே.
அப்படி இருக்கும் நிலையில் நடிகர் கார்த்தி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கார்த்தியின் அறிக்கையில், “நாளும் நம் பசி தீர்க்க பாடுபடும் இந்திய நாட்டின் உழவர்கள், பெருந்திரளாக கடும் பனிப்பொழிவையும், கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் ‘உழவர்’ என்ற ஒற்றை அடையாளத்துடன் தலைநகர் டெல்லியில் கடந்த ஒரு வாரமாக வெட்டவெளியில் போராடி வருகின்றனர். விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பும் பெரும்பங்கு என்ற வகையில் பெருந்திரளாகப் பங்கெடுத்துப் போராடி வருவது வரலாறு காணாத நிகழ்வாகப் பிரமிப்பூட்டுகிறது!
நாளும், பொழுதும் பாடுபட்டால் தான் வாழ்க்கை என்ற நிலையில் தங்கள் மாடு, கழனி மற்றும் பயிர்களை அப்படியைப்படியே போட்டுவிட்டு, குடும்பத்தாரைப் பிரிந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் தொலைதூரம் பயணித்து வந்து தீரத்துடன் போராடி வரும் செய்திகள் நம் ஒவ்வொருவர் உள்ளத்தையும் உலுக்குகிறது!
தண்ணீர் பற்றாக்குறை, இயற்கை சீற்றங்களால் ஏற்படும் துயர்கள், விளைப் பொருள்களுக்கு உரிய விலையில்லாமை உள்ளிட்ட பல பிரச்சனைகளால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் உழவர் சமூகம், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களால் தாங்கள் இன்னும் மிக மோசமாகப் பாதிப்படைவோம் எனக் கருதுகிறார்கள்!
தங்கள் மண்ணில் தங்களுக்கு இருக்கும் உரிமையும், தங்கள் விளைப் பொருட்கள் மீது தங்களுக்கு இருக்கும் சந்தை அதிகாரமும் பெரும் முதலாளிகள் கைகளுக்கு இந்த சட்டங்களால் மடைமாற்றும் செய்யப்பட்டுவிடும் என்றும், ஆகவே இந்த சட்டங்களை விலக்கு கொள்ள வேண்டும் என்பதும் அவர்களின் வேண்டுகோளாக உள்ளது. ஆகவே, போராடும் விவசாயிகளின் குரலுக்குச் செவி சாய்த்து, அவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலித்து, உழவர்கள் சுதந்திரமாகத் தொழில் செய்வதை மத்திய அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே அனைத்து மக்களின் எதிர்பார்ப்பு! அதை அரசு தாமதிக்காமல் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறோம்.” என்று கார்த்தி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.









