செய்திகள்
எம்.பி.யை ஒருமையில் பேசிய விவகாரம்!… மன்னிப்புகேட்ட அமைச்சர் கே.என்.நேரு

பல வருடங்களாக திமுகவில் இருப்பவர் கே.என்.நேரு. மறைந்த முதல்வர் கருணாநிதி காலம் தொட்டு திமுகவில் செல்வாக்கு மிக்கவராக இருப்பவர். தற்போது திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் அவர் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகியதோடு, நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும் இருக்கிறார்.
இந்நிலையில், செய்தியாளர்கள் இவரிடம் கேட்ட ஒரு கேள்விக்கு ‘வெங்கடேசன்னு ஒருத்தன் இருக்கான். அவன கேளு’ என பதில் கூறினார். கம்யூனிஸ் கட்சியை சேர்ந்தவர் சு. வேங்கடேசன். தற்போது அவர் எம்.பி.யாக இருக்கிறார். அவர் சிறந்த எழுத்தாளரும் கூட. சாகித்ய அகாடமி விருதும் பெற்றுள்ளார். அதோடு, திமுகவின் கூட்டணி கட்சி எம்.பி அவர். சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருபவர்களில் இவர் முக்கியமானவர்.
இவரை ‘அவன் இவன்’ என கே.என்.நேரு பேசியதால் எதிர்ப்பு கிளம்பியது. மேலும், அதிகாரிகளிடம் மிகவும் கொச்சையாக அவர் பேசுவதாகவும் சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். இந்த விவகாரம் சர்ச்சை ஆனதை புரிந்து கொண்ட கே.என்.நேரு டிவிட்டர் பக்கத்தில் ‘பாராளுமன்ற உறுப்பினர் திரு. சு. வெங்கடேசன் அவர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழகச் செயலர் திரு. பாலகிருஷ்ணன் அவர்களுக்கும்; பாராளுமன்ற உறுப்பினர் அவர்களை ஒருமையில் குறிப்பிட்டது மனவருத்தப் படுத்தியிருந்தால் பொறுத்தருள்க. இனி இவ்வாறு நிகழாது பார்த்துக்கொள்கிறேன்’என பதிவிட்டுள்ளார்.

















