தமிழ்நாடு
கல்லூரி திறந்த முதல் நாளே பலியான ஆசிரியை: மதுரையில் சோகம்

ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்ட நிலையில் கல்லூரிகள் திறந்த முதல் நாளிலேயே கல்லூரி ஆசிரியை ஒருவர் பரிதாபமாக விபத்து ஒன்றில் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன என்பதும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் மதுரையை அடுத்த அலங்காநல்லூர் என்ற பள்ளியை சேர்ந்த ஆர்த்தி என்ற ஆசிரியயை கல்லூரி திறக்கப்பட்டதை அடுத்து தனது தோழி குரல்மொழி என்பவருடன் பாலிடெக்னிக் கல்லூரி வேலைக்கு சென்றார். வேலை முடிந்து வீட்டிற்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் வந்த இரண்டு கார்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இதில் விபத்தில் சிக்கிய ஒரு கார் தாறுமாறாக ஓடி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆர்த்தி, குரல்மொழி ஆகியோர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் ஆர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்றும் குரல்மொழி மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கல்லூரி திறந்த முதல்நாளிலேயே விபத்தில் சிக்கி கல்லூரி ஆசிரியை ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


















