தமிழ்நாடு
‘ஒரு மதுரைக்காரனுக்கு இதவிட என்ன சந்தேஷம் வேணும்’- ஸ்டாலின் செயலால் நெகிழ்ந்த எம்.பி!

‘மதுரைக்காரனான எனக்கு இதைவிட மகிழ்வான செய்தி என்ன இருக்க முடியும்?’ என தமிழக முதல்வர் ஸ்டாலினின் செயலால் நெகிழ்ச்சி அடைந்துள்ளார் மதுரை எம்.பி சு.வெங்கடேசன்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தை இன்று சந்தித்தார். தமிழக சட்டப்பேரவைக் கட்டடத்தின் 100-வது ஆண்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராகக் குடியரசுத் தலைவர் சென்னை வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் ஸ்டாலின். விழாவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்தைத் திறந்து வைக்கவும் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் மற்றும் குடியரசுத் தலைவரின் சந்திப்பின் போது முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவருக்கும் ‘The Multiple Facets of Madurai’ என்னும் புத்தகத்தைப் பரிசாக அளித்துள்ளார். இந்த நிகழ்வினால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக மதுரை எம்.பி சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இன்று குடியரசுத் தலைவரைச் சந்தித்த தமிழக முதல்வர் அவர்கள், மனோகர் தேவதாஸின் நூலான The Multiple Facets of My Madurai எனும் நூலினை அளித்துள்ளார். மதுரைக்காரனான எனக்கு இதைவிட மகிழ்வான செய்தி என்ன இருக்க முடியும்? மாமதுரையின் அழகை மனோவின் ஓவியத்தின் வழியே காண்பது பேரனுபவம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இன்று @rashtrapatibhvn -வை சந்தித்த @CMOTamilnadu அவர்கள், மனோகர் தேவதாஸின் நூலான The Multiple Facets of My Madurai எனும் நூலினை அளித்துள்ளார்.
மதுரைக்காரனான எனக்கு இதைவிட மகிழ்வான செய்தி என்ன இருக்க முடியும்?
மாமதுரையின் அழகை மனோவின் ஓவியத்தின் வழியே காண்பது பேரனுபவம்@mkstalin pic.twitter.com/rK1xHn5Inq
— Su Venkatesan MP (@SuVe4Madurai) July 19, 2021

















