தமிழ்நாடு
ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகள் திறப்பு: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

தமிழகத்தில் கொரனோ பாதிப்பு காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படவில்லை என்பதும் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது கொரனோ பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பதும் தெரிந்ததே. தற்போது பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் மட்டுமே மூடப்பட்டுள்ளன என்பதும் கிட்டத்தட்ட மற்ற அனைத்தும் திறந்துவிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் விரைவில் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் சற்றுமுன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் பேட்டி அளித்தார். ஆகஸ்ட் 1 முதல் மாணவர்கள் சேர்க்கைக்காக கல்லூரிகள் திறக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். இருப்பினும் வகுப்புகள் தொடங்கும் தேதி குறித்து அவர் எதுவும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ஆகஸ்ட் 1 முதல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்றும், ஏற்கனவே பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தெரிவித்த அவர், அனைத்து பல்கலைக்கழகங்களும் எம்ஃபில் படிப்பைத் தொடர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
















