தமிழ்நாடு
இன்று முதல் சேவையை தொடங்குகிறது கல்வி தொலைக்காட்சி: தமிழகம் இந்தியாவுக்கே முன்னோடி!

தமிழக அரசின் சார்பில் கல்வி தொலைக்காட்சி இன்று முதல் தனது ஒளிபரப்பை தொடங்குகிறது. இந்தியாவுக்கே முன்னோடி திட்டமான இதை அனைத்துப் பள்ளிகளிலும் நேரலை செய்ய பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தின் எட்டாவது தளத்தில் இந்த 24 மணி நேரமும் செயல்படும் கல்வி தொலைக்காட்சிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 1 கோடி ரூபாய் மதிப்பில் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பத் தேவையான காட்சியரங்கம், ஒளிப்பதிவுக் கூடங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ளத் தகவலை வழங்க உள்ளது இந்த கல்வி தொலைக்காட்சி.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் இந்த கல்வி தொலைக்காட்சி சேனலைப் பார்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வகுப்புக்கான ஒளிபரப்பை அந்த வகுப்பு மாணவர்கள் கண்டறிந்து பயன்பெறுவர். மீண்டும், மாலையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதால் வீட்டில் சென்றும் மாணவர்கள் கல்வி தொலைக்காட்சி சேனலைப் பார்த்துப் பயன்பெற முடியும்.
கல்வி தொலைக்காட்சி சேனலின் தொடக்க விழாவை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார். இதில் துணை முதல்வர் ஓபிஎஸ், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொள்கின்றனர். இந்த தொடக்க விழாவையும் அனைத்துப் பள்ளிகளிலும் ஒளிபரப்ப தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த திட்டம் இந்திய அளவில் கல்வித்துறையில் ஒரு முன்னோடி திட்டமாக அமைய உள்ளது. இதற்கு தமிழகம் முன்னுதாரணமாக உள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் வந்ததில் இருந்து பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.















