இந்தியா
அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் ரோட் ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் – உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்தது தமிழ்நாடு அரசு

சமீபத்தில் கருரில் நடந்த த.வே.க. தலைவர் விஜயின் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 43 பேர் இறந்ததை அடுத்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் ரோட் ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திடுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு தயாரித்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் அவர்களால் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை உயர்நீதிமன்றம் பரிசீலனை செய்து சில நாட்களுக்குள் தனது கருத்துக்களையும் திருத்தங்களையும் தெரிவிக்க உள்ளது. தமிழ்நாடு அரசு தயாரித்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன என தொடர்ந்து பார்ப்போம்.
அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டங்கள் ரோட் ஷோக்களுக்கான இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் 5 ஆயிரம் பேருக்கு மேல் கூடக்கூடிய கூட்டங்கள் கலாச்சார நிகழ்வுகள் மற்றம் மத நிகழ்வுகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டங்கள் ஊர்வலங்கள் மற்றும் ரோட் ஷோக்கள் எந்த தேதியில் எந்த நேரத்தில் எந்த இடத்தில் எதற்காக நடத்தப்படும் என்பதையும் பங்கேற்க உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் மற்றம் அவர்களுடன் எத்தனை வாகனங்கள் வரும் என்பதையும் குறிப்பிட்டு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்.
தலைமை விருந்தினர்கள் வரும் நேரம் மற்றும் புறப்படும் நேரம் பிரச்சாரம் துவங்கும் இடம் மற்றும் முடியும் இடம் ஆகியவற்றையும் விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
கூட்டத்தில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
கூட்டம் நடக்கக்கூடிய இடம் மற்றும் கலந்துகொள்ளக்கூடிய பொதுமக்கள் எண்ணிக்கை ஆகியன குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்க வேண்டும். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொதுப்பணித்துறையினரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
50000 பேருக்கு மேல் கூடுவார்கள் என எதிர்பார்க்கக்கூடிய நிகழ்வுகளுக்கு 30 நாட்களுக்கு முன்பே அனுமதி கோரி விண்ணப்பிக்க வேண்டும்.
திடீரென ஏற்பாடு செய்யப்படக்கூடிய கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் பொறுத்தவரை மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரும் சென்னையில் மாநகர காவல் ஆணையரும் முடிவெடுக்க அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.
கூட்டக் கட்டுப்பாடு கூட்டத்தினரின் பாதுகாப்பு குடிநீர் கழிப்பறை உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் வழங்க வேண்டியது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பாகும்.
விண்ணப்பங்களில் முதலுதவி ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்பட்ட நேரத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
நிகழ்ச்சியின்போது பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே ஏற்க வேண்டும்.
நிகழ்ச்சி முடிந்த பின் அந்த இடத்தை முழுமையாக சுத்தம் செய்து தர வேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் மூத்த குடிமக்கள் குழந்தைகள் மாற்றுத் திறனாளிகள் ஆகியோரை நீண்ட நேரம் நிற்க வைக்காமல் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே செய்ய வேண்டும்.
நிகழ்ச்சி துவங்க 2 மணி நேரம் முன்னதாகவே கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த நெறிமுறைகளை பார்த்த நீதிபதிகள் இவற்றை மனுதாரர் மற்றும் அரசியல் கட்சியினருக்கு அரசு வழங்கி ஒப்புகை பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அறிவுறுத்தி வழக்கை 27ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


















