செய்திகள்
CBSE 10, 12 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 17 முதல் தேர்வுகள் தொடக்கம் – 46 நாடுகளில் 45 லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர்!

மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) 2025-26 கல்வியாண்டுக்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் மார்ச் 10 வரை 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வும், ஏப்ரல் 9 வரை 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்பு தேர்வு:
10ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு கணிதப் பாடத்துடன் தொடங்கி, பிரெஞ்சு மொழி பாடத்துடன் நிறைவடைகிறது. மாணவர்கள் எளிதாகத் தயாராகும் வகையில், பாடங்கள் இடைவெளியுடன் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
12ஆம் வகுப்பு தேர்வு:
12ஆம் வகுப்பு (+2) தேர்வுகள் பிப்ரவரி 17 ஆம் தேதி உயிரி தொழில்நுட்பம் (Biotechnology) பாடத்துடன் தொடங்கும். இறுதித் தேர்வாக தரவு அறிவியல் (Data Science) பாடம் ஏப்ரல் 9 அன்று நடைபெறும்.
மொத்த தேர்வர்கள் & பாடங்கள்:
மொத்தமாக 45 லட்சம் மாணவர்கள் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் பங்கேற்கின்றனர். இத்தேர்வுகள் இந்தியாவைத் தவிர 46 நாடுகளில் நடைபெறவுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மொத்தம் 204 பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன.
மாணவர்கள் எந்த குழப்பமும் இன்றி தயாராகும் வகையில், தேர்வு தொடங்குவதற்கு 110 நாட்களுக்கு முன்பே அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
அட்டவணையை பதிவிறக்கம் செய்வது எப்படி:
சிபிஎஸ்இ தேர்வின் முழு அட்டவணையை பதிவிறக்கம் செய்ய, https://www.cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று Examinations → Data Sheet → “CBSE Date Sheet X–XII Final 2026” என்பதை கிளிக் செய்து PDF வடிவில் டவுன்லோடு செய்யலாம்.
