வணிகம்
ஜூன் 1 முதல் அமலில் 6 பெரிய மாற்றங்கள்: எல்பிஜி விலை குறைப்பு முதல் ஆதார் அப்டேட் வரை!

ஜூன் 1 முதல் உங்கள் வாழ்க்கையை மாற்றும் முக்கியமான விதிமாற்றங்கள் – முழுமையான விவரம் இங்கே!
ஜூன் மாதம் ஆரம்பத்திலேயே பொதுமக்களின் நன்மைக்கான முக்கியமான விதிமாற்றங்களை கொண்டு வந்துள்ளது. வீட்டு செலவுகள், பயணச் செலவுகள், நிதி பரிவர்த்தனை, முதலீடு மற்றும் ஆதார் சேவைகள் என பல துறைகளில் இந்த மாற்றங்கள் ஒவ்வொருவரையும் பாதிக்கக்கூடியவை.
1. எல்பிஜி விலை குறைப்பு:
ஜூன் 1, 2025 முதல் 19 கிலோ வணிக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.24 வரை குறைக்கப்பட்டுள்ளது. தற்போது டெல்லியில் ரூ.1723.50, மும்பையில் ரூ.1674.50, கொல்கத்தாவில் ரூ.1826 மற்றும் சென்னையில் ரூ.1881 ஆக மாற்றப்பட்டுள்ளது. இது உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் வணிக சேவைகளுக்கு நன்மை தரும். வீட்டு எல்பிஜி விலையில் மாற்றமில்லை.
2. விமான எரிபொருள் விலை குறைப்பு:
ஏர் டர்பைன் எரிபொருள் (ATF) விலைகள் குறைக்கப்பட்டுள்ளதால் விமான கட்டணங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. டெல்லியில் ATF விலை ₹83,072.55, மும்பையில் ₹77,602.73, கொல்கத்தாவில் ₹86,052.57, சென்னையில் ₹86,103.25 ஆக உள்ளது.
3. மியூச்சுவல் ஃபண்ட் புதிய கட்-ஆஃப் நேரம்:
ஜூன் 1 முதல் ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான கட்-ஆஃப் நேரம் மாலை 7 மணி, ஆஃப்லைன் பரிவர்த்தனைகளுக்கு பிற்பகல் 3 மணி என மாற்றப்பட்டுள்ளது. இந்த நேரத்திற்கு பிறகு செய்யப்பட்ட பரிவர்த்தனைகள் அடுத்த நாள் கருதப்படும்.
4. EPFO 3.0 வெளியீடு:
EPFO இப்போது அதன் புதிய பதிப்பான EPFO 3.0ஐ அறிமுகப்படுத்த உள்ளது. இது மூலம் ATM, UPI மூலமாக EPF பணத்தை எளிதாக எடுத்துக் கொள்ளலாம். நாடுமுழுவதும் 9 கோடிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பயனடையலாம்.
5. கிரெடிட் கார்ட் விதிமாற்றம் (KOTAK வங்கி):
கோடக் மஹிந்திரா வங்கி கிரெடிட் கார்டு யூசர்களுக்கு ஜூன் 1 முதல் புதிய கட்டணங்கள் அமல். ஆட்டோ டெபிட் தோல்வி ஏற்பட்டால் 2% பவுன்ஸ் கட்டணம் (₹450-₹5000 வரை) வசூலிக்கப்படும். மாதாந்திர நிதி கட்டணம் 3.5% லிருந்து 3.75% ஆக அதிகரிக்கும்.
6. ஆதார் புதுப்பிப்பு கட்டணம்:
இலவச ஆதார் புதுப்பிப்புக்கான காலக்கெடு ஜூன் 14 அன்று முடிவடைகிறது. அதன் பிறகு ₹50 கட்டணமாக வசூலிக்கப்படும்.
மேலும், UPI பரிவர்த்தனையில் பெறுநரின் சரியான வங்கிப் பெயர் மட்டுமே தெரியும். QR கோடு அல்லது திருத்தப்பட்ட பெயர்கள் இனி தெரியாது.

