வணிகம்
EPFO ஓய்வூதிய உயர்வு விரைவில் – ரூ.1000ல் இருந்து ரூ.3000 வரை கூட வாய்ப்பு!

EPFO உறுப்பினர்களுக்கு வருகிற காலங்களில் ஓர் பெரிய மகிழ்ச்சி காத்திருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளாக உயர்த்தப்படாத EPS-ஐக் (Employees’ Pension Scheme) குறைந்தபட்ச ஓய்வூதியம் விரைவில் மூன்று மடங்கு வரை அதிகரிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
EPS-95 ஓய்வூதியத் திட்டம் தற்போது மூன்றாம் தரப்பினரால் ஆய்வு செய்யப்படுகிறது. இதன் மூலம் திட்டம் சரியான முறையில் செயல்படுகிறதா என்பதையும், ஓய்வூதியதாரர்கள் தங்களுக்குத் தகுதியான தொகையை பெறுகிறார்களா என்பதையும் மதிப்பீடு செய்யப்படுகிறது.
தற்போது, EPS ஊழியர்கள் ஓய்வுக்குப்பின் மாதம் குறைந்தபட்சம் ரூ.1000 ஓய்வூதியமாக பெறுகின்றனர். ஆனால், பணவீக்க நிலையை கருத்தில் கொண்டு இதை ரூ.3000 ஆக உயர்த்தும் திட்டத்தை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
தற்போதைய EPFO கட்டணம் மூலம் உருவான EPS கார்பஸ் ரூ.8 லட்சம் கோடியைக் கடந்துள்ள நிலையில், ஓய்வூதிய உயர்வு நிதி ரீதியாக சாத்தியமாகவே உள்ளது. தற்போது EPS-இன் கீழ் 78.5 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களில் 36.6 லட்சம் பேர் மட்டுமே குறைந்தபட்சம் ரூ.1000-ஐ மாதந்தோறும் பெற்று வருகின்றனர்.
2014-ல் கடைசியாக, EPS ஓய்வூதியம் ரூ.250-ல் இருந்து ரூ.1000-ஆக உயர்த்தப்பட்டது. தற்போது இதை மேலும் ரூ.3000-க்கு உயர்த்தும் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன. மேலும், EPS ஓய்வூதியம் அதிகபட்சமாக ரூ.7500-க்கு உயர்த்த வேண்டும் என நிதியமைச்சரிடம் ஓய்வூதியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அடுத்த 2025-ஆம் ஆண்டுக்குள் EPS திட்டத்தின் மூன்றாம் தரப்பு மதிப்பீடு முடிக்கப்பட வேண்டும் எனவும், அதன் அடிப்படையில் ஓய்வூதிய தொகை உயர்வு தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் தெரியவருகிறது.














