வணிகம்
“8வது ஊதியக்குழு அமலாக்கம்: 2026 பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அறிவிப்பு வருமா?”

8வது ஊதியக்குழு அமலாக்கம்: 2026 பட்ஜெட்டில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய அறிவிப்பு வெளியாகுமா?
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வரும் 8வது ஊதியக்குழு (8th Pay Commission) தொடர்பாக ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 2026-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், 8வது ஊதியக்குழுவைச் சார்ந்த முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
8வது ஊதியக்குழு தொடர்பான கேள்விக்கு மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, இந்த ஊதியக்குழுவின் கீழ் சுமார் 50.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளதாகத் தெரிவித்தார். இவர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் ஓய்வூதிய மாற்றங்களுக்கு பெரும் நிதி ஒதுக்கீடு தேவைப்படுவதால், பிப்ரவரி 2026-ல் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் இது குறித்த தகவல்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
8வது ஊதியக்குழு அமலாக்கம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. குறிப்பாக, ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும், அகவிலைப்படி (DA) அடிப்படைச் சம்பளத்துடன் இணைக்கப்படும் போன்ற தகவல்கள் வைரலாகின. ஆனால், இவை அனைத்தையும் மறுக்கும் விதமாக, 8வது ஊதியக்குழுவை அமல்படுத்துவதற்கு இதுவரை எந்த குறிப்பிட்ட தேதியும் நிர்ணயிக்கப்படவில்லை என அமைச்சர் தெளிவுபடுத்தினார். மேலும், DA-வை அடிப்படைச் சம்பளத்துடன் இணைப்பது குறித்தும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
நவம்பர் 2025-ல், நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் 8வது ஊதியக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அதே நேரத்தில், ஊதியக்குழுவிற்கான பணிக்கான விதிமுறைகள் (Terms of Reference – ToR) அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இதன் மூலம், 8வது ஊதியக்குழு அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்கியுள்ளதாக அரசு உறுதிப்படுத்தியுள்ளது.
அதே சமயம், இந்த ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் முன், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை, நிதிப் பொறுப்பு, மாநில அரசுகளுக்கு ஏற்படும் நிதிசார் தாக்கங்கள் போன்ற அம்சங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால், அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான நிதி ஏற்பாடு செய்யப்படும் என்றும் நாடாளுமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக்குழு அமைக்கப்படும். 7வது ஊதியக்குழுவின் காலம் டிசம்பர் 2025-ல் முடிவடைகிறது. இந்த அடிப்படையில், 8வது ஊதியக்குழு ஜனவரி 2026 முதல் அமலுக்கு வர வேண்டும். அப்படி நடைமுறைக்கு வந்தால், அதிகாரப்பூர்வ அமலாக்கம் தாமதமானாலும், ஜனவரி 2026 முதல் அரியர் தொகை (arrears) வழங்கப்படும் வாய்ப்பு உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு பெரும்பாலும் ஃபிட்மென்ட் ஃபாக்டர் (Fitment Factor)-ஐ சார்ந்துள்ளது. 7வது ஊதியக்குழுவில் இது 2.57 ஆக இருந்தது. 8வது ஊதியக்குழுவில், இது 1.92 முதல் 3.00 வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது. ஆணையத்தின் இறுதி அறிக்கை வெளியான பின்னரே இது உறுதி செய்யப்படும்.
தற்போது ரூ.18,000 குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு, ஃபிட்மென்ட் ஃபாக்டர் அடிப்படையில் எதிர்பார்க்கப்படும் சம்பள உயர்வு:
1.92 – ரூ.34,560
2.08 – ரூ.37,440
2.28 – ரூ.41,040
2.57 – ரூ.46,260
2.86 – ரூ.51,480
3.00 – ரூ.54,000
இதனால், 8வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் வருமானத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.






