இந்தியா
இந்தியாவில் அமையும் உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்: சி.என்.என். பத்திரிகை புகழாரம்!

ஜம்மு காஷ்மீரில் இருந்து நாட்டின் மற்ற பகுதிகளை இணைப்பதற்காக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை சுமார் 300 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இருப்பினும், இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. குளிர் காலத்தின் ஒரு பகுதியில் இந்த சாலை மூடப்பட்டு விடும். இந்த நிலையில், காஷ்மீரில் இருந்து நாட்டின் மற்ற பகுதிகளுக்கு செல்லும் வகையில், ரயில் இணைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதனால், ஜீனப் ஆற்றின் மேலே ரயில்வே பாலம் கட்டுவது என முடிவு செய்யப்பட்டது.
வலிமையான ரயில்வே பாலம்
1,315 மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில்வே பாலம், மணிக்கு 266 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசினாலும், நிலநடுக்கங்கள் ஏற்பட்டாலும் அதனை எதிர் கொள்ளும் அதீத வலிமையுடன் உருவாகிறது. இதனால், கத்ரா மற்றும் பனிஹால் பகுதிகளுக்கு இடையேயான தூரத்தைக் கடக்க இதுவரை 12 மணிநேரம் எடுத்துக் கொண்ட சூழ்நிலையில், ரயில்வே பால உதவியால், பயண நேரம் பாதியாக குறையும்.
இரண்டு ஆண்டுகளில் ரயில்வே பாலம் கட்டும் பணி நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது என வடக்கு ரெயில்வே பொது மேலாளர் அஷுதோஷ் கங்கால் இன்று தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் அமைந்துள்ள ஈபிள் டவரை விடவும் 35 மீட்டர்கள் உயரத்தில் இந்த ரயில்வே பாலம் அமைய இருக்கிறது.
நடப்பு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அல்லது அடுத்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பார்வையாளர்களுக்கு திறந்து விடப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.