தமிழ்நாடு
இந்தியா கூட்டணி பெயரை முதலமைச்சர் சொல்லாதது ஏன்? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

தமிழக முதலமைச்சர் சமீப காலமாக இந்தியா கூட்டணி என்ற பெயரை வெளிப்படையாக குறிப்பிடாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய பல முக்கியமான மத்திய அரசுத் திட்டங்கள் கை நழுவி போவதற்கு திமுக அரசே முழுக்க முழுக்க காரணம் என அவர் குற்றம்சாட்டினார். மாநிலத்தின் நலனுக்காக மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து நிதி மற்றும் திட்டங்களைப் பெறுவதில் திமுக அரசு தோல்வியடைந்துள்ளதாகவும் விமர்சனம் செய்தார்.
மேலும், மத்தியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் பங்கெடுத்திருந்த திமுக, அந்த காலகட்டத்தில் தமிழகத்திற்காக எவ்வளவு நிதி மற்றும் திட்டங்களை கேட்டுப் பெற்றது என்ற கேள்வியையும் எழுப்பினார்.
ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த காலத்தில்கூட, தமிழகத்திற்கு தேவையான அளவிலான நிதி மற்றும் முக்கிய திட்டங்களை திமுக பெற முடியவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
“முன்னதாக மூச்சுக்கு 300 தடவை இந்தியா கூட்டணி என்று சொல்லிக் கொண்டிருந்த முதலமைச்சர், தற்போது அந்த பெயரை கூட சொல்லாமல் இருப்பதற்கு காரணம் என்ன?” என்று கேள்வி எழுப்பிய அவர், இது அரசியல் நாடகத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றும் விமர்சனம் செய்தார்.
























